ஆயிரத்தில் நானும் ஒருவன்..

                                              ஆயிரத்தில் நானும் ஒருவன்..

90களின் ஆரம்பத்தில் திரைச்சீலை விலகி சினிமா என்னும் மாய திரையின் உள்ளே நான் மதி மயங்கி கிடந்த காலம் அது..

சினிமா என்பது ஒரு நிமிடத்திற்குள் 24 பிரேம்களில் சொல்லப்படும் உண்மை என்றார் பிரெஞ்ச் இயக்குனர் கோடார்ட். ஆனால் ஹாலிவுட்டின் இயக்குனரான பிரைன் டி பால்மா,ஒரு நிமிடத்தில் 24 முறை பொய் சொல்வதற்கு பெயர் தான் சினிமா என்கிறார்.என்னை பொறுத்தவரை சினிமா என்பது ஒரு நிமிடத்திற்குள் 24 பிரேம்களில் 24 முறை முக்காலமும் செல்லும் மாய கண்ணாடி என்பேன்.இன்று நான் பார்க்கும் பல விஷயங்களை அன்றே என் கண் முன்னே  காட்சிப்படுத்தியதும் இதுவே..






நான் ஒரு ஆற்றங்கரை கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். ஆற்றையும் பரிசலையும்
 தவிர வேறு எதுவும் கண்டதேயில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் எல்லாம் தண்ணீரை மட்டுமே கொண்ட கடல், பிரமாண்டமான பாய்மரக் கப்பல், இரவும் பகலுமாக செல்லும் கடல் பயணம், பீரங்கி,தாய் நாட்டின் விடுதலைக்காக போராடும் தலைவன்,கடல் கொள்ளையர்கள், அடிமைகளாக நாடு கடத்தப்பட்டு விற்கப்படும் மக்கள் என பல்வேறு விதமான விஷயங்களையும் மனிதர்களையும் எனக்கு அறிமுகப்படுத்தியது
ஆயிரத்தில் ஒருவன் என்ற சினிமா தான்..


பின்பு நான் டைட்டானிக் என்ற ஹாலிவுட் சினிமா மூலமாக பிரமாண்டமான சொகுசுக் கப்பல் அதில் இருக்கும் வசதிகள், பலதரப்பட்ட மக்கள்,கடல் பயணமும் அதில் ஏற்படும் ஆபத்துக்கள் போன்றவற்றை வாய்யை பிளந்து கொண்டு பார்த்தாலும் கூட இப்படி எல்லாம் ஒரு உலகம் இருக்கிறது  என்பதை அன்றே அறிமுகம் செய்தது ஆயிரத்தில் ஒருவன் சினிமா தான்.நான் கோவா சென்று கடலையும் கப்பலையும் நேரில் பார்த்த போது கூட ஆயிரத்தில் ஒருவன் சினிமாவில் பார்க்கும் போது இருந்த பிரமிப்பு இல்லை என்று நினைக்கிறேன்..


பொதுவாகவே நான் கருப்பு சிவப்பு சிந்தனைகளை கொண்டவன். அவ்வழியே வந்த தலைவர்களின் வாழ்க்கை வரலாற்றை புத்தகங்கள் மூலம் படித்து தெரிந்துகொண்டவன். அப்படி நான் படித்து எனக்கு மிகவும் பிடித்துப்போன போராளி தான் சேகுவேரா. இவர் மருத்துவராக தன் பணியை துவங்கி மக்களின் விடுதலைக்காக துப்பாக்கி ஏந்தி போராடி உலக மக்கள் மனதில் இன்று வரை நீங்கா இடம்பெற்ற தூய்மையான போராளி இவரே. இவரை இன்ஸ்பிரேசன்னாக வைத்து தான் ஆயிரத்தில் ஒருவன் சினிமாவின் கதாநாயகரான MGR அவர்களின் கதாப்பாத்திரம் வடிவமைத்திருபார்கள் என்று நான் நினைக்கிறேன்..


அடேயப்பா என்ன ஒரு கதாப்பாத்திர வடிவமைப்பு அன்பு, காதல், புரட்சி,வீரம்,கோபம், வெறுப்பு என்று பல தரப்பட்ட உணர்சிகளை கொண்டது. இவை அனைத்திற்கும் உயிர் கொடுத்திருப்பார் புரட்சி நடிகர் MGR அவர்கள். இதில் பேசப்படும் வசனங்களோ செம மாஸ் இந்த வசனங்கள் தமிழகத்தின் எதோ ஒரு மூலையில் இன்றளவும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது..

இன்று பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் சினிமாவின் பல பாகங்களை பார்த்து ரசித்து சிரித்து சிலாகித்து பேசினாலும் ஆயிரத்தில் ஒருவன் சினிமாவில் வரும் கடல் கொள்ளையர்களும் அவர்களின் தலைவனாக வரும் M.N.நம்பியார் அவர்களின் கதாப்பாத்திரம், கொள்ளையர்களின் முத்திரை பதித்து கொடி பறக்கும் பாய்மரக் கப்பல், அவர்களுக்குகென தனி தீவு , தீவில் ஒரு கட்டழகு ராணி என என்னை வேறெரு வித்தியாசமான உலகத்திற்குள் அப்பெழுது பயணிக்க செய்த மிக சிறந்த சினிமா இதுவே..

Comments